பதிவு செய்த நாள்
24
ஜன
2025
05:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேற்று திருப்பரங்குன்றம் வந்தனர்.
நைனார் நாகேந்திரன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை 1931ல் பிரிட்டிஷ் கோர்ட் மலை முழுவதும் முருகன் கோயிலுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்துள்ளது. 1994ல் உயர் நீதிமன்றத்திலும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்துல் சமது, எம்.எல்.ஏ., நவாஸ்கனி எம்.பி., திருப்பரங்குன்றம் வந்து மலையில் ஆய்வு செய்துள்ளனர். இது ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும். நான் கூட இங்கே வந்திருக்க மாட்டேன், அப்துல் சம்மதம் நவாஸ் கனியும் வந்ததால் நாங்களும் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. பெற்றோர் நமக்கு கற்றுக்கொடுத்தது கடவுள் வழிபாடு. அதை விட்டுக் கொடுக்கவோ மாற்றவோ முடியாது. அப்துல் சம்மதம் நவாஸ் கனியும் திருப்பரங்குன்றம் வந்தது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் செயலாகத்தான் நான் நினைக்கிறேன். மலை மேல் முன்பு அசைவம் சமைத்தது கிடையவே கிடையாது. புதிய பழக்கத்தை ஏற்படுத்த வேண்டாம். இதற்கு முன்பு என்ன பழக்கம் இருந்ததோ அதை கடைபிடிப்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. அவர்கள், இது எங்கள் மலை, எங்களுக்கு சொந்தம். இப்பழக்கத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் என்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்றார்.
காடேஸ்வர சுப்ரமணியம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் மலையில் குரங்குகள் அதிகம் உள்ளன. அவற்றிற்கு போதுமான உணவு கிடைக்காததால் பக்தர்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை பறிக்கின்றன. உறவுகளுக்கும் உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.