பதிவு செய்த நாள்
01
பிப்
2025
08:02
திருத்தணி; திருத்தணி ஒன்றியம், தரணிவராகபுரம் கிராமத்தில், ஆண்டுதோறும் தை மாதத்தில் ஒருமுறை, திருத்தணி மலைக்கோவில் உற்சவர் முருகபெருமான், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அந்த வகையில், நேற்று திருத்தணி முருகன் மலைக் கோவிலில் இருந்து, காலை 9:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான், படிகள் வழியாக நல்லாங்குளம் வந்து, அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் எழுந்தருளினார். பின், உற்சவர் முருக பெருமான் காலை 11:00 மணிக்கு, தரணிவராகபுரம் கிராம எல்லைக்கு சென்றடைந்தார். அங்கு, கிராம மக்கள் முருகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மதியம், பிள்ளையார் கோவில் மண்டபத்தில், உற்சவர் எழுந்தருளினார். சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.