பதிவு செய்த நாள்
01
பிப்
2025
08:02
திருவள்ளூர்; திருவள்ளூர் – செங்குன்றம் சாலையில் அமைந்துள்ளது, கீழானுார் கிராமம். இந்த கிராமத்தில், நெடுஞ்சாலை அருகில் உள்ள வயல்வெளியில், சில ஆண்டுகளுக்கு முன், பள்ளம் தோண்டும் போது, ‘சிவலிங்கம்’ கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, கிராமவாசிகள் அந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது மாமல்லபுரம் – காட்டுப்பள்ளி வெளிவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த சிவலிங்கத்தை, அருகில் உள்ள ஓடையில் வீசி, சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதுகுறித்து, கிராமவாசிகள் கூறியதாவது: கீழானுார் கிராமத்தில், திருவள்ளூர் – செங்குன்றம் சாலை அமைப்பதற்கு முன், பல நுாறு கோவில் இருந்துள்ளது. காலப்போக்கில், கோவில் பூமிக்கடியில் சென்றதால், கோவிலில் இருந்த சிலைகளும் புதைந்து விட்டன. வயல்வெளியாக இருந்த பகுதியில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன், பள்ளம் தோண்டும் போது, அங்கு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. கிராமவாசிகள், அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். தற்போது, மாமல்லபுரம் – காட்டுப்பள்ளி புறவழிச்சாலை அமைக்கும் பணிக்காக, அந்த இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதி, சாலை நடுவில் உள்ளது. மேலும், பூமிக்கடியில் கிடைத்த லிங்கமும், அருகில் உள்ள ஓடையில் வீசப்பட்டுள்ளது. எனவே, பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை, அருகில் ஏதாவது ஒரு இடத்தில் கோவில் கட்டி வழிபாடு நடத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.