பதிவு செய்த நாள்
01
பிப்
2025
11:02
மதுரை; ‘திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்னையில் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது’ என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
உதயகுமார் பல்வேறு பிரச்னைகள் குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், சிவசுப்ரமணியன் உட்பட அ.தி.மு.க.,வினருடன் சென்று மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த ஆட்சியில் தொடர்ந்து மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மனுக்கள் எங்கே போகிறது என்று தெரியவில்லை. மக்கள் கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதால் மீண்டும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முதல்வராக வருவார். அவர் முதல்வராக இருந்தபோது ரயில்வே மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிதி பெற்றார். ஆனால் இன்று தேவையான நிதியை பெற முடியவில்லை. அதற்கு அவர் அக்கறை செலுத்தவில்லை என்று கூறினால் முதல்வருக்கு கோபம் வருகிறது. நிதிபெற முடியாவிட்டாலும், கடலில் பேனா வைக்க அக்கறை செலுத்துகிறார். எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலை உள்ளது. இது தமிழ்நாடா அல்லது கருணாநிதி நாடா என்ற கேள்வி எழுகிறது.
சுதந்திரம் பறிபோய்விட்டது; டங்ஸ்டன் விவகாரத்தில் தி.மு.க.,வை பழனிசாமி சட்டசபையில் தோலுரித்துக் காட்ட, முதல்வருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். டங்ஸ்டன் ஒப்பந்தம் ஏற்பட்ட பின் 10 மாத இடைவெளியில் தி.மு.க., என்ன செய்தது. மக்கள் தன்னெழுச்சியாக திரண்டபோது அவர்கள் மீது வழக்கு போட்டது. அந்த பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என சட்டசபையில் பழனிசாமி பேசினார். எனவே இதில் கிடைத்த வெற்றி பழனிசாமி எழுப்பிய உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அண்ணா பல்கலை மாணவி பாலியல் பிரச்னை மறைவதற்குள், தி.மு.க., கொடிகட்டிய கார் பெண்களை விரட்டிய சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் சுதந்திரம் பறிபோய்விட்டது. இந்தியாவில் மதக்கலவரம் பற்றி எரியும்போது ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியில் தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது திருப்பரங்குன்றத்தில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இதில் ஏன் அரசு வேடிக்கை பார்க்கிறது. மதநல்லிணக்கம் பேணும் இங்கு, மதப்பிரச்னையை கிளப்பிவிட்டு பலனைடைவோரை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.