பதிவு செய்த நாள்
03
பிப்
2025
10:02
திருச்சி; மண்ணச்சநல்லுார் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழமையான மூன்று ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள வெங்கங்குடியை சேர்ந்தவர் சுரேஷ். அவர் தன் இடத்தில் புதிதாக தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக, நேற்று, பணியாட்களை வைத்து குழி தோண்டியுள்ளார். அப்போது, 8 அடி ஆழ பள்ளத்தில் மூன்று சுவாமி சிலைகளும், சில பொருட்களும் தென்பட்டுள்ளன. பணியாட்களால் அவற்றை வெளியே எடுத்த சுரேஷ், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, சுவாமி சிலைகளை ஆய்வு செய்தனர். நிலத்தடியில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள், ஐம்பொன்னால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சிலைகள் என்பதும், அதனுடன் இருந்தவை பூஜை செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரிய வந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பு பொருட்களை, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக, வருவாய்த்துறையினர் எடுத்துச் சென்றனர்.