பதிவு செய்த நாள்
05
பிப்
2025
11:02
கோவை; திருப்பரங்குன்றம் மலையை காப்பதற்காக, நேற்று கோவையில் மக்கள் வீடுகளில் விளக்கேற்றினர். திருப்பரங்குன்றம் மலையை காக்க, வீடுகளில் விளக்கேற்றும் நிகழ்வுக்கு, மாநில முருக பக்தர்கள் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. அதன் அடிப்படையில், கோவை ராம்நகர் பகுதியில் பல வீடுகளில் நேற்று மாலை விளக்கேற்றப்பட்டது. இதே போல் சின்னியம்பாளையம், நீலம்பூர், கோவைப்புதுார், சிறுவாணி சாலை மாதம்பட்டி, கணுவாய் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல வீடுகளில், விளக்கேற்றும் நிகழ்வு நேற்று மாலை நடந்தது. கோவில்கள், ஆதினங்கள், மடங்களிலும் விளக்கேற்றப்பட்டது. பலரும் விரதமிருந்து, வேல் வழிபாடு நடத்தினர். திருப்பரங்குன்றம் மலையை காப்பதற்காக, கோனியம்மன் கோவில் முன் திரண்ட இந்துக்கள், அங்கும் விளக்குகளை ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். மாநில முருகபக்தர் பேரவை செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், ‘‘இந்துக்களின் உரிமையை, மீட்டெடுக்க இந்த விளக்கேற்றும் நிகழ்வு நடக்கிறது. கோவை மாவட்டம் முழுக்க, பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் விளக்கேற்றி, ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. திருப்பரங்குன்றம் மலை மீண்டும் இந்துக் கள் வசமே வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,’’ என்றார்.