கோவை; காரமடை அருகே உள்ள குருந்தமலை அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
காரமடை அருகே குருந்தமலையில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கிராம சாந்தி நேற்று இரவு நடந்தது. இன்று ஐந்தாம் தேதி காலை யாகசாலை வேள்வி பூஜையும், அதைத் தொடர்ந்து, 11:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, திருக்கொடி மரத்தில் சேவல் வேல் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
8ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் காலை, மாலை முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடைபெற உள்ளன. 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேருக்கு மகுடம் ஏற்றுதலும், இரவு 9:00 மணிக்கு வள்ளி மலையில் இருந்து, அம்மன் அழைப்பும் நடைபெற உள்ளது. பத்தாம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 11ம் தேதி மாலை வள்ளி, தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுதசுவாமி, தேர்வுக்கு எழுந்தருளுகிறார். மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 12ம் தேதி அபிஷேக பூஜையும், இரவு பரிவேட்டையும், 13ம் தேதி ஆறுமுக காவடி செலுத்தும் வைபவம் நடைபெற உள்ளது. அன்று மாலை தெப்பத் திருவிழாவும், மயில் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. 14ம் தேதி கொடி இறக்கமும், மதியம் சந்தன காப்பு உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா, அறங்காவலர்கள் குழந்தைவேலு, சாவித்திரி, சுரேஷ்குமார், முருகன் மற்றும் செயல் அலுவலர் வனிதா ஆகியோர் செய்து வருகின்றனர்.