பழநிக்கு பாதயாத்திரையாக காவடிகளுடன் புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 11:02
தேவகோட்டை; தேவகோட்டை பகுதியில் இருந்து சுமார் 500 ஆண்டுகளாக தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு லட்சக்கணக்கானோர் பாதயாத்திரையாக சென்று பழநி தண்டாயுதபாணியை தரிசித்து வருகின்றனர். பாதயாத்திரை பக்தர்களுடன் நகரத்தார் நேர்த்திக் கடனாக காவடிகள் எடுத்துச் சென்று மலையேறி வழிபடுகின்றனர். இந்த ஆண்டும் தேவகோட்டை சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று தேவகோட்டையில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டனர். பக்தர்களுடன் 42 நகரத்தார் காவடிகளும், பல நூறு ஆண்டு பாரம்பரியமாக செல்லும் முதலியார் காவடி ஒன்றும் சேர்த்து 43 காவடிகள் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் இருந்து பூஜைகளை தொடர்ந்து புறப்பட்டனர். காவடிகளின் முன் சென்ற வேலிற்கு ( செப்பு) வழிநெடுகிலும் பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். மேலும் காவடிகளுக்கு நால்வர் கோவில், பாலமுருகன் கோவில்களில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. எல்லையில் தனியார் பள்ளி அருகே நாட்டார், நகரத்தார் பிரியாவிடை கொடுக்க கட்டியம் பாட பழநி காவடிகள் புறப்பட்டன. இந்தாண்டு விவசாயம் நன்றாக இருந்ததால் பக்தர்கள் பயணம் அதிகமாக இருந்தது. அன்னதானத்திற்கு அனுமதி வாங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் திடீர் உத்தரவிட்ட போதிலும் வழக்கத்தை விட கூடுதலாக அன்னதானம், பிஸ்கட் ஸ்நாக்ஸ், காபி பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.