பதிவு செய்த நாள்
05
பிப்
2025
12:02
கோவை; திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக்கும் முயற்சியை தடுக்கக்கோரி, நேற்று கோவை கோனியம்மன் கோவில் முன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, இந்து அமைப்புகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை, போலீசார் கைது செய்தனர். திருப்பரங்குன்றம் மலையை காப்பதற்காக, இந்து அமைப்புகள் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்துக்கு சென்றனர். பெரும்பாலானவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோவை பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், விஷ்வ இந்து பரிஷத் தர்மயாத்திரா தென்தமிழக பொறுப்பாளர் சிவலிங்கம், ரத்தினபுரி பா.ஜ.,மண்டல் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் தசரதன், கோவை கோட்ட பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த மகளிர் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.