பதிவு செய்த நாள்
08
பிப்
2025
07:02
பெண்ணாடம்; பெண்ணாடத்தில் அமைந்துள்ள பழமையான பிரளய காலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று மாலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளய காலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் 10ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா கடந்த 3ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று பரிவார தெய்வங்களுக்கு கலாசர்ஷனம், மாலை அங்குரார்ப்பனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, ஜபம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. முன்னதாக காலை வெள்ளாற்றில் இருந்து புனித தீர்த்தம் யானை மீது ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 8:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மாலை 6:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜை, இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. 10ம் தேதி விடியற்காலை 4:30 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை, ஹோமம், 6:00 மணியளவில் பரிவார யாக சாலைகள், கடம் புறப்பாடாகி காலை 7:00 மணிக்கு குடக்கரை விநாயகர், தேரடி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 9:00 மணிக்கு பிரதான யாகசாலை நிறைவு, யாத்ரதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 10:30 மணிக்கு ஆமோதனாம்பிகை உடனுறை பிரளய காலேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.