பதிவு செய்த நாள்
08
பிப்
2025
09:02
புதுச்சேரி; கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்திக் கடன் செலுத்தினர். புதுச்சேரி கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவிலில், செடல் மகோற்சவ விழா கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து, கடந்த 31ம் தேதி முதல், 5ம் தேதி வரை, தினசரி பூஜைகளும், இரவு அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (6ம் தேதி) இரவு முத்துப் பல்லக்கு உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து முக்கிய நிகழ்சியான நேற்று மாலை 6:00 மணிக்கு, செடல் திருவிழா நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் வேண்டுதலின்பேரில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். பின்னர், முத்துமாரியம்மனுக்கு தீபாரதனை நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தரிசனம் செய்தார். அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., உட்பட திரளான பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, இன்று இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.