திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின் 6-ம் நாளில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தைப்பூச விழாவையொட்டி கோயில் கடந்த 02ம் தேதி உள் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிவாச்சாரியர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை ஏற்றி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சமயபுர மாரியம்மன் உற்சவர் அம்பாள் 11 நாட்கள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து திருவீதி உலா நடைபெறும். ஆறாம் நாளான நேற்று உற்சவ அம்மனுக்கு வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது பின்னர் மகா தீபாதாரனை நடைப்பெற்றது. தொடர்ந்து அம்மன் மர யானை வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் பெருந்திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 10ம் தேதி 9ம் நாள் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் புறப்பட்டு கடைவீதி வழியாக சமயபுரம் நான்கு ரோடு அருகே உள்ள தெப்பத்தில் எழுந்தருளி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் 10 ம் நாளான பிப்ரவரி 11ம் தேதி காலை 8 மணிக்குள் சமயபுரம் மாரியம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக அம்மன் கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி மண்ணச்சநல்லூர், நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைந்து பின்பு ஸ்ரீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இவ்விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் செய்திருந்தனர்.