கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு தைப்பூசத்தை ஒட்டி நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று, தைப்பூச அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று தேரோட்டம் நடந்தது. தைப்பூச விழாவை ஒட்டி, கோவில் முழுக்க, காய்கள், கனிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாழைத்தார், இளநீர், கரும்பு மற்றும் அனைத்து விதமான காய்கள், பழங்கள், பூக்களை கொண்டு, பிரகாரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர், அலங்காரத்தை கண்டு வியப்பும், மகிழ்ச்சியும் அடைந்தனர். அலங்கார பணிகளை செய்த சிவக்குமார் கூறுகையில்," கோவில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கோவில் மற்றும் தேருக்கு பலவகையான காய், கனிகள் மற்றும் பூக்களை கொண்டு அலங்காரம் செய்துள்ளோம். பல பணியாளர்களை கொண்டு, எட்டு மணி நேரத்துக்கும் மேலாக அலங்காரம் செய்யும் பணி நடந்தது," என்றார். அலங்கரிக்கப்பட்ட காய்கள், மறு பூஜையன்று அன்னதானத்துக்கு பயன்படுத்தப்படும். பழங்கள், பூக்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும், என, கோவில் நிர்வாகிகள் கூறினர்.