பதிவு செய்த நாள்
12
பிப்
2025
11:02
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் உரைத்தது இன்றும் நமக்குப் பெரிதும் தேவைப்படுகிறது. இன்று நாட்டில் நிலவும் மிக மோசமான பிரச்னை என்னவென்றால் பலரும் பலர் மீது அரசியல், மதம், ஜாதி, மொழி, இனம், பணம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருப்பதுதான். அந்நிய சிந்தனைகள் கொண்டோர் நம் நாட்டைக் கொச்சையாக விமர்சிப்பது அதிகரித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் ஒரு சமய வாழ்க்கை முறையான இந்து மதத்தைக் குறி வைத்து குறை கூறுபவர்கள் கூடிவிட்டார்கள். அவ்வாறு குறை கூறுபவர்களின் பைகள் பணத்தால் நிறைகின்றன.
இப்படிப்பட்டவர்களை இன்று நாம் எப்படி கையாள வேண்டும் என்பதைப் பற்றி 129 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில் சுவாமிஜி அன்றே பேசியதை அவரது வார்த்தைகளிலேயே வாசிப்போம்: "சாதாரண சீர்த்திருத்தவாதிகள் விரும்புவது அங்கொன்றும் இங்கொன்றுமான சீர்திருத்தத்தைத்தான். ஆனால் நான் அடி முதல் முடி வரையிலான மொத்த சீர்திருத்தத்தை விரும்புகிறேன்.
இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? நானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள் போல், ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைக்கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா...? அவர்கள் எல்லோரும் முயன்றார்கள், அவர்களுடைய பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை;
இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல் யாரையும் சபிக்கவில்லை. வாழ்த்துக்களை மட்டுமே அவர்களுடைய உதடுகள் மொழிந்தன. அவர்கள் ஒருபோதும் நிந்திக்கவில்லை. நம் இனம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் மக்களிடம் கூறினார்கள். அவர்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்கள்; பின்னர் மக்களை நோக்கி, இந்துக்களே, இதுவரை நீங்கள் செய்தவை எல்லாம் நல்லதே. ஆனால் என் சகோதரர்களே, அதைவிட இன்னும் நல்லவற்றைச் செய்வோம் என்றே கூறினர். நீங்கள் தீயவர்களாக இருந்தீர்கள், இப்போது நல்லவர்களாவோம் என்று அவர்கள் கூறவில்லை. நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள், இப்போது மேலும் நல்லவர்கள் ஆவோம் என்றே கூறினார்கள். எவ்வளவு பெரிய வித்தியாசம்!
*உருவ வழிபாடு தவறானது என்று கூறுவதைக் கேட்டுக் கேட்டு எனக்குப் புளித்து விட்டது. இன்று இதைக் கேள்விப்படுகின்ற எல்லோருமே அதைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார்கள். நானும் ஒருகாலத்தில் அப்படித்தான் நினைத்தேன். அதற்குத் தண்டனை போல், எல்லாவற்றையும் உருவ வழிபாட்டின் மூலமே பெற்ற ஒருவரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டியதாயிற்று. இங்கே நான் ராமகிருஷ்ண பரமஹம்சரைத்தான் குறிப்பிடுகிறேன். உருவ வழிபாட்டின்மூலம் ராமகிருஷ்ண பரமஹம்சர்களை உங்களால் உருவாக்க முடியுமானால் இன்னும் ஆயிரக்கணக்கான உருவங்களை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான ஆற்றலை உங்களுக்கு இறைவன் அருள்வாராக! உருவ வழிபாடு நிந்திக்கப்படுகிறது. ஏன்? யாருக்கும் தெரியாது. கடவுள் அழகியதோர் வடிவமாகவோ, அடையாள வடிவிலோ குறிக்கப்பட்டால் அது மிகவும் மோசமானது, அது பாவம் என்பான் யூதன்; ஆனால் இருபுறமும் இரண்டு தேவதைகள் அமர்ந்திருக்க, மேலே மேகங்கள் பரவி நிற்க, கடவுளை ஒரு பெட்டியாக உருவகம் செய்தால் அது புனிதமானவை அனைத்திலும் புனிதமானது. கடவுள் ஒரு புறாவின் வடிவில் வந்தால் அது புனிதமானது; ஆனால் அவரே பசுவின் வடிவில் வந்தால் அது முட்டாள்களின் மூட நம்பிக்கை, அதைக் கண்டிக்க வேண்டும்! இதுதான் உலகின் போக்கு.
அடுத்தவனின் கண்ணோட்டத்தில் உலகைப் பார்ப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது! அப்படிப் பார்க்க முடியாததுதான் மனித குலத்தின் சாபக்கேடாக உள்ளது. வெறுப்பு, பொறாமை, சண்டை, சச்சரவு அனைத்திற்கும் அதுதான் மூலகாரணம்.
சிறுவர்களே, மீசை முளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச் செல்லாத நீங்கள் எழுந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்குக் கட்டளையிட விரும்புகிறீர்கள்! வெட்கமாக இல்லை? அத்தகைய அதர்மச் செயலிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியவற்றை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்! மரியாதையற்ற சிறுவர்களே, வெறுமனே தாளில் சில வரிகளைக் கிறுக்கி, சில முட்டாள்களின் மூலம் அவற்றைப் பிரசுரித்துவிட்டால் நீங்கள் உலகிற்கே போதகராகிவிட்டீர்கள் என்று எண்ணமா? நீங்கள் சொல்வதுதான் இந்தியப் பொதுமக்களின் கருத்து என்றா நினைக்கிறீர்கள்!
**வாழ்வில் ஒரு தனிமனிதன் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு நாடும் ஒரு தனிப் பண்பைப் பெற்றிருப்பதைக் காண்கிறேன். அதுவே அதன் மையம், அதுதான் ஆதார சுருதி, அதைச் சுற்றியே பல்வேறு இசையும் இயைபுடன் கலந்து இனிய பண் ஆகிறது. இந்தியாவில் மத வாழ்வே மையமாக, தேசிய வாழ்வு என்னும் பண்ணின் ஆதார சுருதியாக அமைந்துள்ளது. பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டுகளைக் கடந்து வந்த அந்தச் சொந்தத் தேசிய ஆதாரத்தை எந்த நாடாவது உதறிவிட முயலுமானால், அதன் போக்கிலிருந்து விலக முயலுமானால், அந்த முயற்சியில் வெற்றி காணுமானால் அந்த நாடு அழிந்துவிடும்.
எனவே மதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அரசியலையோ, சமுதாயத்தையோ, மற்ற எதையோ உங்கள் மையமாக, உங்கள் தேசிய வாழ்வின் ஆதாரமாகக் கொண்டீர்களானால், நீங்கள் மறைந்துபோய் விடுவதுதான் அதன் விளைவாக இருக்கும். இதைத் தடுக்க வேண்டுமானால், உங்கள் எல்லா வேலைகளையும் மதம் மூலம் என்ற அடிப்படையின் மூலமாகச் செய்யுங்கள். மதம் என்ற முதுகெலும்பின் வழியாக உங்கள் அனைத்து நரம்புகளும் அதிரட்டும்.
*இந்தியாவில் ஒவ்வொரு முன்னேற்றமும் மத எழுச்சியைத் தொடர்ந்தே வர முடியும். சமுதாயக் கருத்துக்களாலோ, அரசியல் கருத்துக்களாலோ மூழ்கடிக்குமுன் இந்தியாவை ஆன்மீகக் கருத்துக்களால் நிரப்புங்கள். நமது உபநிஷத்துகளிலும் புராணங்களிலும் புதைந்து கிடைக்கின்ற அற்புதமான உண்மைகளை அந்த நூல்களிலிருந்து கொண்டு வர வேண்டும். அந்த உண்மைகள் வடக்கிலிருந்து தெற்குவரை, கிழக்கிலிருந்து மேற்குவரை இமயம் முதல் குமரிவரை, சிந்து முதல் பிரம்மபுத்திராவரை நெருப்பைப்போல் பரவுமாறு நாடு முழுவதும் அவற்றைப் பறைசாற்ற வேண்டும்.
*ஆன்மீக ஞானத்தைப் போதித்தால் அதன் பின்னர் உலக அறிவும், நீங்கள் விரும்புகின்ற மற்ற எல்லா அறிவும் உங்களைத் தொடர்ந்து வரும். ஆனால் சமயத்தினை விலக்கிவிட்டு வேறு எந்த அறிவைப் பெற நீங்கள் முயன்றாலும் இந்தியாவில் உங்கள் முயற்சி வீண் என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.
*மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள்தான் தேவை. மற்ற எல்லாம் தயாராகி விடும். ஆற்றல் மிக்க, தீவிரமான நம்பிக்கை உள்ள, மனசாட்சிக்கு மாறாக நடக்காத இளைஞர்கள் இத்தகைய 100 பேர் போதும், உலகையே புரட்டி விடலாம்.
பரப்புங்கள், உங்கள் மதத்தின் மகத்தான உண்மைகளை உலகம் முழுவதும் சென்று பரப்புங்கள். உலகம் அவற்றிற்காகக் காத்திருக்கிறது. மக்களை இழிந்தவர்களாக்கும் கொள்கைகளே பல நூற்றாண்டுகளாகப் போதிக்கப்பட்டு வந்துள்ளன.
பல நூற்றாண்டுகளாகப் பயமுறுத்தி பயமுறுத்தியே அவர்கள் ஏறக்குறைய மிருகங்களாகிவிடும் நிலைக்குச் சென்றுவிட்டனர். **உங்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஆங்கிலேயன் தன்னை நம்புகிறான். நீங்கள் உங்களை நம்பவில்லை. தான் ஆங்கிலேயன், எனவே தான் விரும்புகின்ற எதையும் தன்னால் செய்ய முடியும் என்பதை அவன் நம்புகிறான். அது அவனுள் இருக்கும் தெய்வீக சக்தியை வெளிப்படுத்துகிறது. அவனும் தான் விரும்பியதைச் செய்து முடிக்கிறான். ஆனால் உங்களால் எதுவுமே செய்ய முடியாது என்றுதான் உங்களுக்குச் சொல்லப்படுகிறது, போதிக்கப்படுகிறது. நீங்களும் நாளுக்கு நாள் எதற்குமே பயனற்றவர்களாகி வருகிறீர்கள். நமக்குத் தேவை வலிமையே; எனவே உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்.
*உங்கள் நரம்புகளை வலிமையாக்கிக் கொள்ளுங்கள். இரும்பாலான தசையும் எஃகாலான நரம்புகளுமே நமக்குத் தேவை. காலங்காலமாக அழுது விட்டோம். இனியும் அழுகை கூடாது, சொந்தக் காலில் நில்லுங்கள், மனிதர்கள் ஆகுங்கள். மனிதனை உருவாக்குகின்ற ஒரு மதமே நமக்குத் தேவை, மனிதனை உருவாக்குகின்ற கொள்கைகளே நமக்குத் தேவை. எல்லா வகையிலும் மனிதனை உருவாக்கும் கல்வியே நமக்கு வேண்டும்.
எந்த மகத்தான சாதனைகளுக்கும் மூன்று விஷயங்கள் அவசியமானவை.
1. இதயபூர்வமான உணர்ச்சி. இதயத்தின் மூலம்தான் உத்வேகம் பிறக்கிறது திறக்க முடியாத கதவுகளை எல்லாம் அன்பு திறக்கிறது.
2. மலைகளையொத்த எதிர்ப்புகளை வெல்வதற்கான மனவுறுதி உங்களிடம் இருக்கிறதா?
3. உங்கள் பெயர் அழிந்து, செல்வமெல்லாம் மறைந்தாலும் அதையே உறுதியாகத் தொடர்ந்து உங்கள் லட்சியத்தை நோக்கி செல்வீர்களா?
இத்தகைய மூன்று உறுதிப்பாடுகளும் உங்களிடம் இருக்குமானால் நீங்கள் ஒவ்வொருவரும் பிறர் பிரமிக்கத்தக்கச் செயல்களைச் செய்வீர்கள். செய்தித்தாள்களில் எழுத வேண்டியது இல்லை. மேடை ஏறி பிரசங்கம் செய்ய வேண்டியது இல்லை. உங்கள் முகமே ஒளி வீசி துலங்கும். நீங்கள் ஒரு குகையில் வாழலாம். ஆனால் உங்கள் சிந்தனைகள் அந்தப் பாறையின் சுவர்கள் வழியாக ஊடுருவி வந்து உலகம் முழுவதுமே நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அதிர்ந்து பரவிக் கொண்டிருக்கும். என்றாவது அவை யாருடைய மூளையிலாவது புகுந்து செயல்படும். உண்மையான, தூய்மையான லட்சியத்தைக் கொண்ட சிந்தனையின் ஆற்றல் அத்தகையது.
*என் நாட்டு மக்களே, என் நண்பர்களே, என் குழந்தைகளே, நம் நாடாகிய இந்தத் தேசியக் கப்பல் லட்சக்கணக்கானோரை வாழ்க்கைப் பெருங் கடலைக் கடத்தி அழைத்துச் சென்றிருக்கிறது. இதன் மூலமாக லட்சோபலட்சம் பேர் பேரின்பமாகிய கரைக்குப் போய்ச் சேர்ந்திருக்கின்றனர். ஆனால் இன்றோ ஒரு வேளை உங்கள் சொந்தத் தவறின் காரணமாக இந்தக் கப்பல் சிறிது பழுதடைந்துள்ளது, ஓட்டைகள் விழுந்திருக்கிறது. அதற்காக அதைச் சபிப்பீர்களா?
தேசியக் கப்பலில், நம் சமூகமாகிய அந்தக் கப்பலில் ஓட்டைகள் இருந்தாலும் நாம் அதன் பிள்ளைகள் அல்லவா! நாம் சென்று அந்த ஓட்டைகளை அடைப்போம். நம் இதய ரத்தத்தைக் கொட்டி, மகிழ்ச்சியோடு அந்தக் காரியத்தைச் செய்வோம். முடியவில்லை என்றால் எல்லோரும் இறப்போம். நம் மூளைகளைக் கொண்டு அடைப்பான் செய்து அந்த ஓட்டைகளை அடைப்போம். ஆனால் அதை ஒருபோதும் நிந்திக்க வேண்டாம். இந்தச் சமூகத்திற்கு எதிராக ஒரு கடின வார்த்தைகூடப் பேசாதீர்கள். நான் அதை அதன் கடந்த கால மகோன்னதத்திற்காக நேசிக்கிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் தெய்வங்களின் குழந்தைகள், மேன்மை மிக்க முன்னோர்களின் குழந்தைகள். எல்லா ஆசிகளும் உங்கள்மீது பொழிவதாக! – சுவாமி விமூர்த்தானந்தர், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்