பதிவு செய்த நாள்
12
பிப்
2025
05:02
தொண்டாமுத்தூர்; அ.தி.மு.க.,வில் தற்போது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய, அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்.,க்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதற்கு, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம் பெறாததால், பாராட்டு விழாவிற்கு செல்லவில்லையே தவிர, இ.பி.எஸ்.,யை புறக்கணிக்கவில்லை என, தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில், பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், அ.தி.மு.க.,வில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டது என, கட்சியினர் பேசத் துவங்கினர். இந்நிலையில், கடந்த, 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடந்த பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை, 6:30 மணிக்கு, சுவாமி தரிசனம் செய்ய வந்தார். பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியரை தரிசனம் செய்து, 6:50 மணிக்கு, கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். செங்கோட்டையனுடன், இருவர் மட்டும் வந்தனர்.