ராக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2025 10:02
அவிநாசி; அவிநாசி சேவூர் ரோட்டில் எழுந்தருளியுள்ள ராக்காத்தம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அவிநாசி சேவூர் ரோட்டில் செங்காடு பகுதியில் எழுந்தருளியுள்ள ராக்கத்தம்மன் கோவில் முன்னுறு வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த வரலாறு கொண்டதாகும். இந்நிலையில் அவிநாசி சத்தியமங்கலம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கடந்த ஆண்டு பழமையான கோயில் அகற்றப்பட்டது. பின்னர் அதே பகுதியில்,வேறு இடத்தில் வடக்கு நோக்கிய முகமாக பழமையான கோவிலில் இருந்து அகற்றப்பட்ட கற்கள் பயன்படுத்தப்பட்டு புதிய கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா அவிநாசி திருப்புக் கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. நேற்று காலை நான்காம் கால பூஜையில்,விநாயகர் வழிபாடு, மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்று,கோவில் விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம்,மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அபிஷேக விழாவில் அவிநாசி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.