உடுமலை; சர்வதேச சமய நல்லிணக்க வாரவிழாவை முன்னிட்டு, திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளையின் சார்பில், உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் அரங்கில் சமய நல்லிணக்க சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. திருமூர்த்திமலை பரஞ்ஜோதி யோகா கல்லுாரி பேராசிரியர் சிவசுப்ரமணியம் வரவேற்றார். திருமூர்த்திமலை உலக சமாதான அறக்கட்டளை அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, உடுமலை பூர்வீக பள்ளிவாசல் துணை இமாம் முஹம்மது இஸ்மாயில்கைரி, இஸ்லாமில் அன்பு நெறி குறித்து பேசினார். அடுத்து, சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தின் தலைவர் செல்வராஜ் கிறிஸ்து மதத்தில் அன்பு காட்டுவது குறித்து பேசினார். பழநி மெய்த்தவ பொற்சபை ஞானாசிரியர் மெய்த்தவம் அடிகள் பேசியதாவது: தமிழ் மரபில் ஜாதியும், வேறுபாடுகளும் இல்லை. இறைவனின் அருளில்தான் அன்பு நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு நுாலிலும் அன்பின் வெளிபாடு ஒவ்வொரு இறைவனையும் குறிக்கிறது. திருமூலர் அன்பே சிவம் என்றார். அன்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். யாதும் ஊரே யாவரும் கேளிர் என கணியன் பூங்குன்றனார், அன்பினால் பிரபஞ்ச ஒருங்கிணைப்பை வலியுறுத்துகிறார். இவ்வாறு, பேசினார். தொடர்ந்து, குருமகான் பரஞ்ஜோதியார் அருளுரை வழங்கினார். விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மூர்த்தி நன்றி தெரிவித்தார்.