சஷ்டி விரதம்; வேண்டுவன யாவும் தரும் முருகனை வழிபடுவோம்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2025 10:02
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் இருந்தாலும் அதில் சிறந்தது சஷ்டி. முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. சஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் நம்பிக்கை. ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள்.
ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். இன்று மனதால் நினைத்தாலும் வேண்டியதை அருள்வான் முருகபெருமான்..!