பதிவு செய்த நாள்
21
பிப்
2025
05:02
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அருகே சிற்பங்கள் நிறைந்த கல் மண்டபம் சிதிலமடைந்து கிடப்பதை மேம்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி சிவன் கோயில் பின் பகுதியில் ரோடு ஓரத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான கல் மண்டபம் சிதிலமடைந்து கிடக்கிறது. கல் மண்டபத்தில் உள்ள துாண்களில் பல்வேறு வகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கல்மண்டபம் எதிரே தெப்பக்குளம் உள்ளது. முற்காலத்தில் அருகில் உள்ள கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் போது சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளத்தில் நீராடி இந்த கல் மண்டபத்தில் தங்கி பூஜை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அத்துடன் இந்த வழியில் செல்லும் மக்கள் தங்குவதற்குரிய அன்னச்சத்திரமாகவும், இளைப்பாறவும், தியான மண்டபமாகவும் இருந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுச் சான்றுகளாக கருதப்படும் கல் மண்டபங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. இது போன்ற கல்வெட்டுகள் நாயக்கர்கள் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வதற்கு இடையில் இது போன்ற கல் மண்டபங்களில் தங்கி இளைப்பாறி செல்வதற்கு உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பெரும்பாலான கல் மண்டபங்கள் சிதைந்து கிடக்கின்றன. பாலையம்பட்டி அருகில் உள்ள கல் மண்டபம் நாயக்கர் கால ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம். இது 16 ம் நூற்றாண்டை சார்ந்தது. இது போன்ற கல் மண்டபங்களை பாதுகாக்கவில்லை என்றால் கடந்த கால வரலாற்றை நாம் இழந்து விடுவோம் என, வரலாற்று ஆய்வாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.