பதிவு செய்த நாள்
24
பிப்
2025
04:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் பிப். 10ல் பாலாலயம் பூஜைகளுடன் துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயில்களான மலை மேல் காசி விசுவநாதர் கோயில், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கோயில், புதிய படிக்கட்டில் உள்ள படிக்கட்டு விநாயகர் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது. அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களில் விரைவில் கும்பாபிஷேக பணிகள் துவங்க உள்ளது. உப கோயில்கள் கும்பாபிஷேக பணிகளை அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் செய்து வருகின்றனர். சுப்பிரமணிய சுவாமி கோயில் ராஜகோபுரத்தில் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமான செலவில் உபயதாரர்மூலம் திருப்பணிகள் துவங்கும் வகையில் இன்று காலை முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் ரமேஷ், அஜித், முகூர்த்த கால் மூங்கிலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து ராஜகோபுரம் அருகில் ஊன்றினர். தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளர் ஹரி தியாகராஜன், சுப்பிரமணியசாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் மணிச் செல்வம், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.