பதிவு செய்த நாள்
25
பிப்
2025
10:02
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களில், நாளை மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடக்கிறது.
இதையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில், நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலை, மேலச்சேரியில் உள்ள லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில், நாளை இரவு 7:00 மணிக்கு மூலவருக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபராதனை நடக்கிறது. இரவு 7:00 மணி முதல், நாளை மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை, மேலச்சேரி வேதபுரீஸ்வரர் திருக்கயிலாய வாத்திய இசை திருக்கூட்டம், அழகிய சிற்றம்பலம் உடையான் திருக்கயிலாய வாத்திய திருக்கூட்டம், புலிப்பாக்கம் வாத்திய இசையுடன் நான்கு கால பூஜைகள் நடக்கிறது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் கிழக்கு கரை அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரர், வீரஆஞ்சநேயர் கோவிலில், நாளை மாலை 5:00 மணிக்கு மஹா சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அகத்தியரால் பிரதிஷ்டை செய்து, மஹா ஸ்வாமிகள் வழிபட்ட கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில், நாளை மாலை 4:00 மணிக்கு பால்குடம் விழாவும், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடும் நடக்கிறது.
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், சோதிபுரீஸ்வரர் கோவிலில், நாளை மாலை 6:00 மணிக்கு நான்கு கால பூஜை துவங்குகிறது. கோவை யோகா ஈஷா மையம் சார்பில், காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில், ‘மஹா சிவராத்திரி ஈசனுடன் ஓர் தெய்வீக இரவு’ நிகழ்ச்சி, நாளை மாலை 6:00 மணி முதல், மறுநாள் காலை 6:00 மணி வரை, கோவை யோகா ஈஷா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும், மஹா சிவராத்திரி தியானமும் நடக்கிறது. இலவச முன்பதிவிற்கு: isha.co/msr-kanchipuram-wab, 79048 14934, -83000 39000 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரரர் வழங்கிய அத்திலிங்க தரிசனம், மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சி.எஸ்.எம்., தெருவில், வண்டு விடும் துாது எனும் பக்தி இலக்கிய பாடல்பெற்ற தலமான மஹா ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவிலில், நாளை மாலை 6:00 மணிக்கு முதற்கால சிறப்பு பூஜை துவங்கி, நாளை மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் கால சிறப்பு பூஜை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் ஆஸ்பிட்டல் சாலை மதங்கீச பெருமான் கோவிலில், நாளை மாலை 6:00 மணிக்கு சுபாஷினி வெங்கடேசனின் திருமுறை இன்னிசையும், இரவு 7:30 மணிக்கு காஞ்சி ஸ்ரீமகாலட்சுமி நிருத்யாலயா நடனப்பள்ளி மாணவியரின் பரதநாட்டியமும் நடக்கிறது.