பதிவு செய்த நாள்
25
பிப்
2025
03:02
பந்தலூர்; நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே, உப்பட்டி பகுதியில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு, முருகன் கோவில் கமிட்டியினர், பொதுமக்கள் இணைந்து சீர்வரிசை எடுத்துச் சென்றது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
பந்தலூர் அருகே உப்பட்டி பகுதியில் ஜும்மா மசூதி கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் கோவில் கமிட்டியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து நேற்று காலை, செந்தூர் முருகன் கோவில் கமிட்டி சார்பில் தர்மகர்த்தா மூர்த்தி, தலைவர் செந்தில்வேல் தலைமையில்., பழங்கள், இனிப்புகள், அரிசி, காய்கறி, வாழை இலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பள்ளிவாசலுக்கு சென்ற கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்களை, பள்ளிவாசல் தலைவர் மஜீத் ஹாஜி, செயலாளர் ஐமுட்டி, அசப்ஜான் மற்றும் நிர்வாகிகள் கட்டித்தழுவி வரவேற்றனர். தொடர்ந்து சீர்வரிசை பொருட்கள் பள்ளிவாசல் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கோவில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் பள்ளிவாசலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பள்ளிவாசல் கமிட்டி சார்பில், சீர்வரிசை எடுத்து வந்த குழுவின் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது. பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, சீர்வரிசை எடுத்துச் சென்ற நிகழ்வு அனைத்து சமுதாய மக்கள் மத்தியிலும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் கூறுகையில், இந்த பகுதியில் அனைத்து சமுதாய மக்களும் ஒரே உறவாக வாழ்ந்து வருவதை இந்த நிகழ்வு வெளிக்காட்டி உள்ளது. தொடரும் மத ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள இந்த நிகழ்வை, பார்த்து அனைவரும் ஒன்றிணைந்து சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் கமிட்டி செயலாளர் முருகேசன், மற்றும் நிர்வாகிகள், கமிட்டி மகளிர் குழுவினர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கணேஷ், கிரீஸ்குமார்,நவுபல், பாரதமாதா மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிஜூ, கூடலூர் அரசு கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் ஊர் பொதுமக்கள், பள்ளிவாசல் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.