பதிவு செய்த நாள்
27
பிப்
2025
11:02
விருதுநகர்; விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்கள், குலதெய்வ கோயில்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 4 கால பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.
சிவலிங்க வழிபாடு, விளக்கு பூஜை, சிவநாமம் எழுதும் போட்டி, ஆராதனை, அர்ச்சனை, நாட்டியாஞ்சலி ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஆன்மிக சங்கங்களின் அகண்டநாம பஜனை, தேவாரம், திருவாசகம், திரு அருட்பா, திருமந்திரம் பஜனை நடந்தது. இரவில் சிவநாமம் எழுதும் போட்டி நடந்தது. தொடர்ந்து கருத்தரங்கம், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சிவகணேசன் கோயிலில் பஜனையும், அபிஷேகமும் நடந்தது. பாவாலியில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் சிவகுருமடத்தில் சிவராத்திரி வழிபாடு நான்கு கால பூஜைகள், அபிஷேகங்களுடன் நடந்தது. மீசலுார் தாதம்பட்டி ராஜம்மாள் கோயிலில் சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. மூளிபட்டி தவசிலிங்கம் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
* தாயில்பட்டி கழுவுடையம்மன் கோயில், சிதம்பரேஸ்வரர் கோயில், நென்மேனி கைலாசநாதர் கோயில், சாத்துார் விஸ்வநாதர் கோயில் ,ஏழாயிரம் பண்ணை அருகே மேலச்சத்திரம் காசி விஸ்வநாதர் நாதர் கோயில், பெரிய கொல்லப்பட்டி பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில், நள்ளி சிங்கமடை அய்யனார் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் ,பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏழாயிரம் பண்ணை ,சிவகாசி, சாத்துார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
*ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் நான்கு கால சிவராத்திரி வழிபாடு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முதலியார்பட்டி தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் 92 வயது மூதாட்டி முத்தம்மாள், கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. பெரிய மாரியம்மன், இருளப்பசாமி, பெரியசாமி, பட்டத்தரசியம்மன், ராக்காச்சியம்மன், பேச்சியம்மன் உட்பட பல்வேறு கோயில்களிலும் மகா சிவராத்திரி வழிபாடு விடிய, விடிய நடந்தது. இவை தவிர குலதெய்வ கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இதை முன்னிட்டு கோயில்கள் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டன. விடிய விடிய விழாக்கள் நடந்தது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.