பதிவு செய்த நாள்
27
பிப்
2025
11:02
சிதம்பரம்; சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், நடந்த 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா துவங்கியது. மஹா சிவராத்திரியான நேற்று, சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள, வி.எஸ்., டிரஸ்ட் வளகத்தில் துவங்கிய விழாவில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார். செயலாளர் சம்மந்தம், டாக்டர் அருள்மொழிச்செல்வன் முன்னிலை வகித்தனர். நாட்டியாஞ்சலி நினைவாக மத்திய அரசு சார்பில், நடராஜர் உருவம் பொறித்த முப்பரிமான சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி வெளியிட்டு பேசுகையில், ‘நாட்டியாஞ்சலி விழா கலை சார்ந்த விழா மட்டுமல்லாமல் தெய்வீக தன்மை கொண்டது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலிருந்து நாட்டிய கலைஞர்கள் இங்கு வந்து நடனமாடுவது சிறப்பு என்றார்.
நேற்று மாலை 5:45க்கு தொடங்கியது. ஊட்டி சபிதா மன்னாடியார் பரதம், சக்தி சஞ்சனா சீரளாவின் பரதம், சென்னை ஓ.வி.எம். நடன மைய மாணவிகள் பரதம் நடந்தது. பின், சென்னை பரதகலாஞ்சலி குழுவினரின் பரதம், யு.எஸ்.ஏ., சகிதி பள்ளி மாணவிகளின் கூச்சுப்புடி நடனம், மும்பை லட்சுமி ராஜ் பரதம், யு.எஸ்.ஏ., கலாதாரா கலை மைய மாணவிகளின் பரதம், கோவை சங்கவி, தாரனியின் பரதம், சுபஸ்ரீ சசிதரன் பரதம், சென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் பரதம், சென்னை ஜெய் குஹானி பரதம், ஹைதராபாத் அபிநய தர்பாணா கலை மைய மாணவிகள் கூச்சுப்புடி நடனம், கோவை சங்கரம் கலை மைய மாணவிகளின் பரதம், பெங்களூரு சுமங்கலா பிரபு, சிந்து ஸ்ரீதர், பார்கவி ஆகியோரின் பரதம், பெங்களூரு நாட்டியசேஷத்ரா குழுவினர் பரதம், துபாய் ரூபா பிரபு கிருஷ்ணன், லட்சுமி விஸ்வநாத், சரிதா மேனன் ஆகியோரின் பரதம், பட்டுக்கோட்டை சிவக்கதிர் நிருத்யாலயா மாணவிகளின் பரதம் என இரவு 2:00 மணி வரை நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. வரும் மார்ச் 2ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில், 400க்கும் மேற்பட்ட பரத கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், ராமநாதன், டாக்டர் கணபதி, சபாநாயகம், முத்துக்குமார், ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.