பதிவு செய்த நாள்
28
பிப்
2025
10:02
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில், பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், மற்றும் சண்முகசெட்டி தெரு பூங்காவனத்தம்மன் கோவில் என, 3 கோவில்களில், நேற்று மயான கொள்ளை திருவிழா நடந்தது.
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, முகவெட்டு எடுத்து தென்பெண்ணை ஆற்றிற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், எலுமிச்சை பழங்களை உடலில் குத்திக்கொண்டும் ஊர்வலமாக சென்றனர். முதுகில் அலகு குத்தியபடி உரல், தேர், சங்கிலி ஆகியவற்றை மயானத்திற்கு இழுத்துச் சென்றனர். இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், சிறுவர், சிறுமியர், காளி, அம்மன், ஈஸ்வரன் போன்ற வேடங்களை அணிந்து வேண்டுதல் நிறைவேற்றினர். மதியம், 3:30 மணிக்கு, தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில் மற்றும் சண்முகசெட்டி தெரு பூங்காவனத்ம்மன் கோவில்களில் இருந்து, அம்மன் பூத வாகனத்தில் மயான கொள்ளைக்கு புறப்பட்டார். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர்கள், தென்பெண்ணை ஆற்றின் கரையிலுள்ள அண்ணாதுரை சிலை அருகில், 5:40 மணிக்கு வந்தடைந்தன. அங்கு பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு கயிற்றின் மூலம் அந்தரத்தில் தொங்கியபடி பறந்து சென்று, சுவாமிக்கு மாலை அணிவித்து, கற்பூரம் காட்டி, குழந்தையை துாக்கிக் கொண்டு ஆசி பெற்றும் வேண்டுதல் நிறைவேற்றனர். பின்னர் தேர்கள் தென்பெண்ணை ஆற்றில் நிறுத்தப்பட்டன. அங்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில், தற்போது புனரமைப்பு பணி நடப்பதால், இந்தாண்டு அம்மன் மயான கொள்ளைக்கு செல்லவில்லை. விழாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.