அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆளுநர் ரவி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2025 11:02
துாத்துக்குடி:திருச்செந்துாரில் உள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் தமிழக ஆளுநர் ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப். 28) நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ரவி விமானம் மூலம் நேற்று துாத்துக்குடி வந்தார். மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அவரை வரவேற்றார். பின்னர், கார் மூலம் திருச்செந்துார் சென்ற அவர், கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதிக்கு சென்றார். கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு மரியாதை அளித்து வரவேற்றனர். கோவில் முன் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த கடல் நீரில் அவர் தீர்த்தம் எடுத்து கொண்டார். அய்யா வைகுண்டர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி, 5 முறை கோவில் பள்ளியறையை (கருவறை) சுற்றி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் அய்யா வைகுண்டரின் புகைப்படத்தையும், விளக்கு ஒன்றையும் வழங்கி கௌரவித்தனர். வெளியே வந்த ஆளுநருடன் கோவில் நிர்வாகிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஆளுநர் வருகையே முன்னிட்டு திருச்செந்துார் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திடீர் பரபரப்பு: கோவிலுக்கு வந்த ஆளுநர் ரவி அங்குள்ள அறையில் உடை மாற்றுவதற்காக சென்றார். அவர் இருந்த அறைக்கு அருகே இருந்த ஜெனரேட்டர் அறையில் இருந்து திடீரென பயங்கர சத்தத்துடன் புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கிருந்தவர்கள் ஜெனரேட்டர் மெயின் சுவிட்சை அணைத்ததால் புகை குறைந்தது.