பதிவு செய்த நாள்
01
மார்
2025
07:03
பாலக்காடு; குருவாயூரின் சின்னமான மஞ்சுளால் முன்பாக, புதிய வெங்கல கருட சிற்பம் நிறுவப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் நுழைவுவாயிலுக்கு முன்பாக, மஞ்சுளால் என்ற பகுதியுள்ளது. இங்கு, பக்தர்களை வரவேற்கும் வகையில், 1968ல் கோவையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரால், கருட சிற்பம் ஒன்று நிறுவப்பட்டது. சிமென்டால் நிறுவிய இந்த சிற்பம் பழுதானதால், புதிதாக வெங்கல சிற்பம் நிறுவ கோவில் தேவஸ்தான நிர்வாக குழுவினர் தீர்மானித்தனர். இதையடுத்து, இந்தச் சிற்பம் தயாரிப்பதற்கு, பறவூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு குன்னப்பிள்ளி, 1.20 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். தொடர்ந்து, 5,200 கிலோ எடையும், 20 அடி நீளமும், 8 அடி உயரமும் கொண்ட புதிய வெங்கல சிற்பத்தை உருவாக்கும் பணியை, கண்ணூர் பயன்னூரை சேர்ந்த உண்ணிகானாயி துவங்கினார். பணிகள் நிறைவடைந்த நிலையில், தங்க வர்ணம் பூசப்பட்ட சிற்பத்தை நேற்று தேவஸ்தான நிர்வாக குழுவிடம் அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில், கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், தந்திரி சேன்னாஸ் தினேசன் நம்பூதிரிப்பாடு, தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்களான மனோஜ், விஸ்வநாதன், நிர்வாகி வினயன், குருவாயூர் நகராட்சி தலைவர் கிருஷ்ணதாஸ், திரைப்பட இயக்குனர் ஹரிஹரன், மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.