பதிவு செய்த நாள்
01
மார்
2025
07:03
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் மார்ச் 12 ல் நடைபெறுவதையொட்டி காலை கொடியேற்றம் நடைபெற்றது.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் வரலாற்று சிறப்பு பெற்றது. இது ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். ராகுவும், கேதுவும் தனித் தனி சன்னதிகளில் தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ளனர். ஞாயிறு தோறும் ராகு காலத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலின் தேரோட்டம் , ஆண்டுதோறும் மாசி மாதம், மாசி மக தேரோட்டமாக நடைபெறும். 2020 க்கு பின் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை.
வரும் மார்ச் 12 ல் தேரோட்டம் நடத்த ஹிந்து அறநிலைய துறை முடிவு செய்துள்ளது. இதற்கான கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. முன்னதாக வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனுமந்தன்பட்டி உத்தம நாச்சியம்மன் கோயில், உத்தமபாளையம் பிடாரி அம்மன் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று மாலை முதல் மார்ச் 11 வரை தினமும் காலை, மாலையில் அனைத்து சமூகத்தினரின் மண்டகப்படி நடைபெறும். விதவிதமான அலங்காரத்தில் சுவாமி வீதி உலா வருவார். மார்ச் 11 ல் திருக்கல்யாணமும், 12 ல் தேரோட்டமும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பி.டி.ஆர்., விஜயராஜன், டி.எஸ்.பி. செங்கோட்டு வேலவன், செயல் அலுவலர் சுந்தரி, அட்வகேட் ராஜேந்திரன், கர்ணம் ரவி, தென் காளஹஸ்தி சேவா அறக்கட்டளை டிரஸ்டி முருகேசன், ஓம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் அய்யப்பன், செயலர் ரவி, உறுப்பினர்கள் அசோக் குமார், முருகன், மறவர் சங்க தலைவர் சுருளி, முன்னாள் கவுன்சிலர் ராஜாங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.