பதிவு செய்த நாள்
03
மார்
2025
10:03
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் பிறந்தநாளையொட்டி, செவ்வாடை பக்தர்கள் குவிந்தனர்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் 85வது பிறந்தநாளையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மன் குருபீடத்தில் உள்ள, பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், பங்காரு அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று, அடிகளாரின் திருப்பாதுகைகளுக்கு, பாத பூஜையை செய்தனர். இதில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் குவிந்து, வழிபட்டனர். சித்தர் பீட வளாகத்தில், தங்க ரதத்தேரில் பங்காரு அடிகளார் சிலை வைத்து, ஊர்வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில், மக்கள் நலப்பணி விழா மற்றும் பங்காரு அடிகளார் பிறந்தநாள் மலர் வெயீட்டு விழா இன்று, 3ம் தேதி நடக்கிறது. மலேஷிய துாதரகத்தின் தென்னிந்திய பிரதிநிதி சரவணகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்து வருகின்றனர்.