சோமனூர்; ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சோமனூர் அடுத்த ராமாச்சியம் பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கடந்த, 18 ம்தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. 25 ம்தேதி இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு வரை பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். கடந்த, 3 ம்தேதி விநாயகர் மற்றும் கருப்பராயன் பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, அம்மன் அழைத்தல் நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். ஏராளமான கிடாக்கள் வெட்டப்பட்டு பூஜை நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.