சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கற்பூரம், பிரம்பு வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2025 12:03
காங்கயம்; காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இக்கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டி. நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது. சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பர். அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கடந்த பிப்ரவரி 25ம் தேதி முதல் வைக்கோல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள ஆறுதொழுவு தங்கவேல்(50) என்ற பக்தரின் கனவில் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்க உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று முதல் கற்பூரம் மற்றும் பிரம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். என சிவாச்சரியார் தெரிவித்தார்.