பதிவு செய்த நாள்
10
மார்
2025
12:03
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசிதிபெற்ற ஆன்மிக நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது. கந்த பெருமான் சுயம்பு மூர்த்தியாகவும், மும்மூர்த்தி அம்சமாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாதந்தோறும் பரணி கிருத்திகை, சஷ்டி, விசாகம் நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதுதவிர கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உத்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. மாசி மாதம் பிரம்மோத்சவ பெருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. தினசரி கந்த பெருமான் கிளி, யாணை, மயில் உட்பட வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முக்கிய விழாவாக, ஏழாம் நாள் உத்சவமான தேர்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. காலை 7:00 மணியளவில் உற்சவர் கந்தனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, கந்தபெருமான் விசேஷ அலங்காரத்தில், கோவிலிருந்து தேரடிக்கு அரோகரா கோஷங்களுடன் பக்தர்கள் வெள்ளத்தில் புறப்பட்டார். பின், சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் கந்தபெருமான் எழுந்தருளினார். 9:30 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து துவக்கினர். பக்தர்கள் கந்தா, சண்முகா, முருகா என கோஷங்கள் எழுப்பி வடம் பிடித்து இழுத்தனர். தேரடியிலிருந்து புறப்பட்ட தேர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி வழியாக பகல் 3:00 மணியளவில் தேரடிக்கு வந்தது. தேர் உத்சவத்தை ஒட்டி, மாட வீதி பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர், ஜுஸ் வழங்கப்பட்டன. விழாவில், திருப்போரூர் பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் பக்திபரவசத்துடன் வழிப்பட்டு சென்றனர். விழா, ஏற்பாடுகளை கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் மற்றும் உபயதாரர்கள் செய்தனர். விழாவில், 100க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல், உயர்கோபுரம் அமைத்து குற்ற சம்பவங்கள் நடக்கமால் கண்காணித்தல், தேருடன் வலம் வருதல், மாற்று உடையில் கண்காணித்தல் என பல்வேறு வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் வகையில், திருப்போரூர் மாடவீதிக்கு வரும் வாகனங்களை புதிய ஆறு வழிச்சாலை, திருப்போரூர் ரவுண்டானா, கிரிவலச்சாலை வழியாக திருப்பி விட்டனர். இன்று மாலை ஆலத்தூர் கிராமத்தில் பரிவேட்டை நிகழ்ச்சியும், 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவமும், 15ம் தேதி காலை 7:30 மணிக்கு வள்ளியை முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.