பதிவு செய்த நாள்
11
மார்
2025
03:03
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில், கரும்படு சொல்லியம்மை உடனுறை சாட்சிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இது சிவனின் 64வது திருவிளையாடல் சாட்சி நாத படலம் அரங்கேறிய தலமாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க தலத்தில், கடந்த 1995ம் ஆண்டிற்கு பிறகு மாசிமக பிரமோற்சவம் விழா நடைபெறாமல் தடைப்பட்டு போனது. இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச்.3ம் தேதி மாசிமக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை (11ம் தேதி) நடந்தது. இதில், 293வது குரு மகா சன்னிதானம் மதுரை ஆதீனம், தர்மபுரம் ஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாட்சி நாதா, சாட்சி நாதா என்று முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து உற்சவர் சாட்சிநாதசுவாமி, தனி தேரில் எழுந்தருளினார். கரும்படு சொல்லியம்மை விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகள் தனித்தனி கட்டு தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நாளை 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, பிரம்ம தீர்த்த குளத்தில், தீர்த்தவாரியுடன், மாசிமக திருவிழா நிறைவு பெறுகிறது.