பதிவு செய்த நாள்
12
மார்
2025
11:03
சமீப நாட்களாக ஜாதி, மதங்களுக்கு இடையே மோதல் வழக்கமாகி விட்டது. ஆனால் ஜாதி, மதங்களை பார்க்காமல் சமத்துவத்துடன் வாழ்வோரும் உள்ளனர். இவர்களுக்கு முகமது கலிமுல்லா சிறந்த உதாரணமாவார். மாண்டியா, நாகமங்களாவில் வசிப்பவர் முகமது கலிமுல்லா, 72. இவர் பசராளு கிராமத்தின் அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். புராதன கோவில்கள், கல்வெட்டுகள், சாசனங்களை பாதுகாப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
36 ஆண்டுகள்; பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். எங்காவது புராதன கோவில்கள், கல்வெட்டுகள் சிதிலம் அடைந்திருந்தால், அவற்றை சீரமைத்து பாதுகாப்பதில் ஈடுபடுகிறார். 36 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய இவர், நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வந்துள்ளார். நாட்டின் வரலாறு, கலாசாரத்தை நன்கு அறிந்தவர். வரலாற்றின் மீது அதிக பற்றுள்ளவர். இதுவே அவருக்கு கோவில்கள், கல்வெட்டுகளை சீரமைக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மதவேறுபாடு இல்லாமல், எம்மதமும் சம்மதமே என்ற மனப்பான்மையில் செயல்பட்டு, மத ஒற்றுமைக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.
இது குறித்து, முகமது கலிமுல்லா கூறியதாவது: ஹொய்சாளர்கள் 13ம் நுாற்றாண்டில் கட்டிய மல்லிகார்ஜுன சுவாமி கோவில், என்னை மிகவும் கவர்ந்தது. கோவிலை பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டியது. இலக்கியம், கலாசாரம் மீது எனக்கு இருந்த ஆர்வம், புராதன கோவில்கள், கல்வெட்டுகள், சாசனங்களை பற்றி ஆழமாக ஆய்வு செய்ய, என்னை ஊக்கப்படுத்தியது. தொட்ட ஜடகா கிராமத்தில் உள்ள, சென்னகேசவா கோவிலும் எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த கோவிலை விஜயநகர சாம்ராஜ்யத்தின் கிருஷ்ண தேவராயர் கட்டினார். கிருஷ்ண தேவராயருக்கு திருமலா தேவி, சின்னா தேவி என்ற இரண்டு ராணிகள் இருந்தனர். சின்னா தேவியின் நினைவாக சக்ரவர்த்தி, சென்னகேசவா கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. ஆனால் அழகான கோவில், புறக்கணிக்கப்பட்டு சீர்குலைந்திருப்பதை பார்த்து, என்மனம் வருத்தம் அடைந்தது. இக்கோவிலும் கூட ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜுக்காக கட்டிய தாஜ்மஹால் போன்றிருந்தது. கோவிலை சீரமைக்க விரும்பினேன். அப்போது புராதன கோவில்களை சீரமைப்பதில் ஈடுபடும், தர்மஸ்தலா மடத்தின் ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா தர்மோத்தானா டிரஸ்ட் பற்றி தெரிந்து கொண்டேன். சென்னகேசவா கோவிலின் போட்டோ, வரலாற்று தகவல்களுடன், தர்மஸ்தலா கோவில் அறங்காவலர் வீரேந்திர ஹெக்டேவை சந்தித்து, வேண்டுகோள் விடுத்தேன். என் வேண்டுகோளை ஏற்று கொண்ட டிரஸ்ட், கோவிலை சீரமைக்க எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பிட, இன்ஜினியர்களை அனுப்பியது. செலவில் 40 சதவீதம் தொகை வழங்க டிரஸ்ட் சம்மதித்தது.
அதன்பின் மாநில அரசும் 40 சதவீதம் தொகை வழங்க முன் வந்தது. 20 சதவீதம் தொகையை கிராமத்தினரிடம் திரட்ட வேண்டியிருந்தது. கோவிலின் வரலாறு, இதனை சீரமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பெங்களூரின் ஸ்ரீநகரில் வசிக்கும் மக்களை தொடர்பு கொண்டு, கோவிலை சீரமைக்க தானம் செய்யும்படி வேண்டினேன். இவர்களிடம் வசூலான 2.5 லட்சம் ரூபாயை, டிரஸ்டிடம் வழங்கினேன். ஓராண்டில் பணிகள் நிறைவடைந்தன. சென்னகேசவா கோவில் சீரமைக்கப்பட்டதை பார்த்து, பல்வேறு கிராமத்தினரும், தங்கள் ஊரில் உள்ள கோவிலை சீரமைக்கும்படி, வேண்டுகோள் விடுத்தனர். தர்மஸ்தலா டிரஸ்ட் ஆதரவுடன், ஹொய்சாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட, மாண்டியாவின் நாகமங்களா மச்சலகட்டா கிராமத்தில் உள்ள மல்லேஸ்வர கோவில் புதுப்பிக்கப்பட்டது. மீண்டும் ஸ்ரீநகர் மக்களிடம் நிதியுதவி பெற்று, கோவிலை சீரமைத்தேன். ஆதி சுஞ்சனகிரி மருத்துவ கல்லுாரி அருகில் உள்ள சென்னகேசவர் கோவில், 10 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின் ஹாசன், சென்னராயப்பட்டணாவின் ஹிரேசாவே கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோவில் 8 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. கோவில்கள் மட்டுமின்றி சாலை ஓரங்கள், கோவில்களில் சிதிலமடைந்துள்ள கல்வெட்டுகள், சாசனங்களை பாதுகாப்பதில் ஈடுபட்டேன். பொதுவாக நடுகல்கள், படைவீரன் யுத்தத்தில் வீரமரணம் அடைந்தால், அதன் அடையாளமாக அமைக்கப்படுவதாகும். இவற்றை பாதுகாக்க வேண்டும்; ஆனால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மறைந்தவர்களின் நினைவாக கட்டப்பட்ட நடுகல்களை கவுரவிக்க வேண்டும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுவரை ஏராளமான கல்வெட்டுகளை பாதுகாத்து உள்ளோம்.
1,060 கல்வெட்டுகள்; மாண்டியா மாவட்டத்தில் 1,060 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் உள்ள விஷயங்களை புரிந்து கொள்ள வல்லுநர்கள் இல்லை. நான் இவற்றை சேகரித்து, ஸ்ரீரங்கபட்டணாவின் அருங்காட்சியத்தில் வைத்து உள்ளேன். நாகமங்களாவின் ஹளிசந்திரா கிராமத்தில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 13 அடி உயரமான கல்வெட்டை ஒரு விவசாயி, தன் மாடுகளை கொட்டகையில் கட்டிப் போட பயன்படுத்தினார். கல்வெட்டின் மகத்துவத்தை, அவருக்கு புரிய வைத்தேன். அதன்பின் கிரேன் பயன்படுத்தி கல்வெட்டை கொண்டு சென்று, அந்த கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளி முன் நிறுவப்பட்டது. புராதன கோவில்கள், கல்வெட்டுகளை கண்டுபிடிக்க பல இடங்களுக்கு நான் பயணிக்கிறேன். எந்த இடத்திலும் எனக்கு எதிர்ப்பு வரவில்லை; சமுதாயத்தினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது கடவுள் சார்ந்த விஷயம் அல்ல. வரலாறு தொடர்பு உடையது. கோவில்களும், கல்வெட்டுகளும் நம் கலாசாரத்தின் அடையாள சின்னங்கள். இன்றைய சிறார்களுக்கு அமெரிக்காவின் வரலாறு தெரிந்திருக்கிறது. ஆனால், தங்கள் சொந்த ஊரின் வரலாறு தெரியவில்லை. கலாசாரத்தை பற்றியும் தெரிவதில்லை. இவற்றின் மகத்துவத்தை உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -