பதிவு செய்த நாள்
13
மார்
2025
11:03
மாமல்லபுரம்; பாலாற்றில், புத்தர் கால சமய சின்னம், முத்திரை மோதிரம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்று விரிவுரையாளர், வரலாற்று ஆய்வாளர்கள் சங்க பொதுச்செயலருமான மதுரை வீரன், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் தாலுகா ஆகிய பகுதிகளில், பாலாற்றுப் படுகையில், கடந்த 16 ஆண்டுகளாக மேற்புற கள ஆய்வு நடத்துகிறார். பாலாற்றில் சோழர், பல்லவர் உள்ளிட்டோர் ஆட்சிக்கால தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய நாணயங்கள், ஆபரணங்கள், பானைகள் உள்ளிட்டவற்றை, முன்பு கண்டெடுத்துள்ளார். தற்போதைய ஆய்வில், புத்தர் கால சமய சின்னம், முத்திரை மோதிரம் உள்ளிட்டவற்றை கண்டெடுத்ததாக தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: வட இந்திய பகுதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய புத்த மத சின்னம், முதல் முறையாக செங்கல்பட்டு, படாளம் அருகில் பாலாற்றில் கிடைத்தது. அப்பகுதி நாணயங்களிலும், இச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முத்திரை மோதிரமும் கிடைத்தது. அவை செம்பில் செய்யப்பட்டவை. மேலும், சங்க காலத்தைச் சேர்ந்த 45 செ.மீ., நீளம், 23 செ.மீ., அகலம், 7.5 செ.மீ., தடிமன் கொண்ட செங்கல் கிடைத்துள்ளது. அக்காலத்தில் கோட்டை, கோட்டைச்சுவர் இப்பகுதியில் இருந்திருக்கலாம். மண்ணால் செய்யப்பட்ட புகைப்பிடிப்பான், ஈயத்தாலான காதணி, செம்பு அஞ்சனக்கோல் ஆகியவையும் கிடைத்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.