பதிவு செய்த நாள்
13
மார்
2025
05:03
விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்; பிறருக்கு வழிகாட்டுவதில் முதலிடத்தை வகிக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். சனி பகவானின் பார்வையால் நீங்கள் அடைந்து வந்த சங்கடம் இனி இருக்காது. உடல் நிலையில் இருந்த பாதிப்பு மன நிலையில் குழப்பம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு தேடிவரும். இதுநாள் வரை போராட்டமாக இருந்த நிலை மாறும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். சனி பகவான் ராகு, சூரியன் சந்திப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். ஓய்வு உறக்கமின்றி செயல்படுபவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள், பிள்ளைகளால் மனக்கவலை, தாய்வழி உறவுகளால் நெருக்கடி என ஒரு சிலருக்கு சங்கடம் ஏற்படலாம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். காவல்துறையினர், பேரிடர் மீட்புத்துறையினர் பணிபுரியும் இடத்திலும் சுய வாழ்க்கையிலும் கவனமாக இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 4.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 21, 27, 30. ஏப். 3, 9, 12.
பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட வளம் உண்டாகும்.
அனுஷம்; எதிலும் கவனமாக ஈடுபட்டு வெற்றி அடையும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும் பார்த்து சங்கடங்களையும் நெருக்கடிகளையும் உண்டாக்கி வரும் நிலையில், குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவற்றிலிருந்து விடுதலைக் கிடைக்கும். நேற்று திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்திலும் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்குவது வீடு வாங்குவது என்ற கனவு நனவாகும். அலைச்சலும் உழைப்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபம் கூடும். மார்ச் 30 முதல் புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் செயல்களில் தெளிவு இருக்கும். வியாபாரிகளுக்கு, கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைகளை சந்தித்து வந்த நிலை மாறும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் மறையும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாவதுடன் உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். தம்பதிக்குள் அனுசரித்துச்சென்று வேலைகளை நடத்தி முடிப்பீர். மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப். 4, 5.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.
பரிகாரம்: பைரவரை வழிபட நெருக்கடி நீங்கும்.
கேட்டை; உச்சத்தை எட்டும் பாக்கியம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். கடந்த மாத நெருக்கடி விலக ஆரம்பிக்கும். குடும்பம், தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாதம் முழுவதும் லாப ஸ்தானம் பலமடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்சத்திரநாதன் புதன் பகவான் மார்ச் 30 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொடர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் இருந்த வேலை முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். குரு பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் முன்னேற்றமடையும். முடங்கிக்கிடந்த தொழில் லாபம் காணும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அந்நியரால் லாபம் கூடும்.தம்பதிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும், ராசிநாதன் அஸ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பதாலும் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. வாய்ப்பு தேடி வந்தாலும் அவற்றில் உள்ள நன்மைத் தீமைகளை அறிந்து ஏற்றுக்கொள்வது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வை எளிதாக எதிர்கொள்வீர். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப். 5, 6.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14, 18, 23, 27. ஏப். 9.
பரிகாரம்: வீர ராகவப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.