பதிவு செய்த நாள்
14
மார்
2025
08:03
சம்பல்: உத்தர பிரதேசத்தில் கடந்த 1978-ல் மூடப்பட்ட சிவன் கோவிலில், 46 ஆண்டுகளுக்கு பின் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில், கடந்த டிச., 13-ல் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது, முழுதுமாக மூடப்பட்டு கிடந்த ஒரு கட்டடத்தை அதிகாரிகளும், போலீசாரும் கண்டறிந்தனர். அது குறித்து விசாரித்தபோது, அது ஒரு சிவன் கோவில் என தெரிந்தது.
பஷ்ம சங்கர் கோவில் அல்லது கார்த்திகேய மஹாதேவ் கோவில் என அழைக்கப்படும் அந்த கோவிலில் அனுமன், சிவலிங்கம் சிலைகள் இருந்தன. கடந்த 1978-ல் இங்கு ஏற்பட்ட மதக் கலவரம் காரணமாக கோவில் பூட்டப்பட்டதும், அதன்பின், அப்படியே அந்த கோவில் பூட்டிக் கிடந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, கோவில் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில், நேற்று அந்த கோவிலில், 46 ஆண்டுகளுக்கு பின், ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவில், பொதுமக்கள், சமூக அமைப்பினர், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். சம்பலில், கடந்த நவ., 24-ல் தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு சென்றபோது நடந்த வன்முறையில், நான்கு பேர் உயிரிழந்த, ஷாஹி ஜமா மசூதி அமைந்துள்ள இடத்தில் இருந்து மிக அருகில், கார்த்திகேய மஹாதேவ் கோவில் உள்ளது.