பதிவு செய்த நாள்
17
மார்
2025
06:03
தேனி; தேனி பங்களா மேட்டில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது.
இக் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக மார்ச் 15ல் முதல் காலயாக சாலை பூஜைகள் துவங்கியது. மார்ச் 16ல் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9:26 மணிக்கு மேல் கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை நாடார்கள் உறவின் முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். மாலையில் திருகல்யாண வைபவம், இரவு சுவாமி நகர்வலம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. உறவின்முறை துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கோயில் தேவஸ்தான செயலாளர்கள் ராமர்பாண்டியன், புலேந்திரன், இணைச்செயலாளர்கள் தாளமுத்து, பழனிவேல்முருகன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், தேவஸ்தான நிர்வாகி கமிட்டி உறுப்பினர்கள், அனைத்து நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.