பதிவு செய்த நாள்
21
மார்
2025
12:03
சென்னை; ‘கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், தைப்பூசம் மற்றும் சித்திரை திருவிழாவில், இனி ஆண்டுதோறும் தேரோட்டத்தை நடத்த வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிந்து கோவில் பாதுகாப்பு இயக்க, கோவை மாவட்ட செயலர் முத்து கணேசன் தாக்கல் செய்த மனு: கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் 1,000 ஆண்டுகள் பழமையானது. இங்கு, தைப்பூசம், சித்திரை திருவிழா நாட்களில், 200 ஆண்டுகளாக எவ்வித தடையுமின்றி தேரோட்டம் நடந்து வந்தது. கடந்த, 1993ல் இருந்து தேரோட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேரோட்ட திருவிழா நடத்த அனுமதி கோரி, ஹிந்து அறநிலைய துறைக்கு பல முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அவற்றின் மீது எவ்வித பதிலும் இல்லை. இதே கோவிலில் பல்வேறு விழாக்கள், சிறப்பாக நடந்து வருகின்றன. கோவை மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும், தேர் திருவிழா சிறப்பாக நடக்கிறது. எந்த விதமான கலவரங்களும் ஏற்படவில்லை. எனவே, இந்த ஆண்டு முதல், தைப்பூசம் மற்றும் சித்திரை திருநாள்களில், உரிய போலீஸ் பாதுகாப்புடன், தேரோட்ட திருவிழா நடத்த, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், பி.ஜெகன்நாத் ஆஜராகி, ‘‘கடந்த பிப்ரவரி, 11 தைப்பூச விழாவின் போது, அமைதியாக தேரோட்டம் நடந்துள்ளது. வழக்கை தொடர்ந்த பிறகு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பழைய சம்பவங்களை காரணம் காட்டி, தேரோட்ட விழாவுக்கு தடை விதிப்பது ஏற்புடையதல்ல,’’ என்றார். அப்போது, அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ‘‘தேர் திருவிழா, 28 ஆண்டுகளுக்கு மேலாக, கொரோனா, கோவில் திருப்பணி, குடமுழுக்கு, பொது தேர்தல் போன்ற காரணங்களால் நடத்தப்படவில்லை. வழக்கு நிலுவையில் உள்ள போது, மனுதாரரை போல பல்வேறு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த மாதம் தேரோட்டம் நடத்தப்பட்டது. அடுத்து சித்திரை தேர் விழா நடத்த, கோவில் நிர்வாக அதிகாரி, மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கோரியுள்ளார்,’’ என்று தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில், பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ‘‘கடந்த பிப்.,11ல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளுடன், விழா நடத்துவது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்படும்,’’ என்றார். இந்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், ‘கோட்டை அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் தேர் திருவிழா, எந்த இடையூறும் இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தடையின்றி நடத்தப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மே, 10ல் நடக்கும் தேர் திருவிழாவை அமைதியாக நடத்த, அதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகளை காவல்துறை விதிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.