மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 31 முதல் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2025 12:03
மதுரை; மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 31 கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்., 9 வரை 10 நாட்கள் நடக்கிறது.
மார்ச் 30ல் அம்மன் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெறும். மார்ச் 31 மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளுகிறார். அப்போது மீனாட்சி சுந்தரேஸ்வரரிடமிருந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு யானை மீது அமர்ந்து நான்கு சித்திரை வீதி வழியாக வந்து தெப்பக்குளம் கோயிலை சென்றடைகிறார். அங்கு இரவு 11:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி, முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில் 5ம் நாள் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு செலுத்துவர். அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து அருள்பாலிப்பார். 7ம் நாள் விளக்குபூஜை, 8ம் நாள் பூப்பல்லக்கு நடக்கிறது. 9ம் நாள் சட்டத்தேரில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 10ம் நாள் மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். பின்னர் அன்றிரவு தீர்த்தவாரியுடன் பங்குனித்திருவிழா நிறைவு பெறுகிறது.