பதிவு செய்த நாள்
10
டிச
2012
11:12
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் வளாகத்தில், ஸ்ரீஹரிஹர புத்ரன் ஸ்ரீஐயப்பசுவாமிக்கு ஐயப்ப விளக்கு நிகழ்ச்சி கடந்த, 30 ஆண்டுகளுக்கு பின் பவானியில் நடந்தது. ஐயப்ப மகாசபை உறுப்பினர்கள் கூறியதாவது:ஐயப்பனின் வாழ்க்கை வரலாற்றை பாட்டு வடிவிலும், நாட்டிய நாடக வடிவிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்காக பவானி செல்லியாண்டியம்மன் கோவில் வளாகத்தில் ஐயப்பன் வாவர், பகவதி ஆகியோருக்கென தனித்தனி சன்னதிகளில், கேரள முறைப்படி நிர்மானிக்கப்பட்டு, தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று கால யாகபூஜைகள் செய்யப்பட்டன. காலை, 5 மணிக்கு கணபதி ஹோமம், பகல், 11 மணிக்கு உச்ச பூஜை, 12 மணிக்கு அன்னதானம், மாலை, 4 மணிக்கு சுவாமி அழைக்க (பாலக்கொம்பு) புறப்படுதல், 5 மணிக்கு செண்டை மேளத்துடன் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீஎல்லையம்மன் கோவிலில் இருந்து பாலக்கொம்பு எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு அத்தான பூஜை, தாயம்பகா வாத்தியம், இரவு, 9.30 மணிக்கு ஐயப்பனின் ஜனனம் பற்றி வஞ்சி பாட்டுடன் கூடிய நிகழ்ச்சி, நள்ளிரவு, 12.30 மணிக்கு புலிப்பால் எடுக்க சின்னக்கோவிலான காசி விசுவநாதர் கோவிலில் இருந்து புறப்படுதல், இரவு, 1.30 மணிக்கு தீப்பந்த விளையாட்டு, இரவு, 2 மணிக்கு ஸ்ரீஐயப்பன்-வாவர் போர், ஞாயிறு காலை, 3 மணிக்கு பூக்குழி இறங்குதல், 4 மணிக்கு குருதி பூஜையுடன் நிறைவு பெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பவானி எம்.எல்.ஏ., நாராயணன், பாலகொம்பு எடுத்து வரும் நிகழ்ச்சியை எல்லையம்மன் கோவிலில் இருந்து துவக்கி வைத்தார். இதில் பெண்கள் கையில் விளக்கு ஏந்தியவாறு, செல்லியாண்டியம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட ஐயப்ப பந்தலுக்கு வந்தனர்.பவானி நகராட்சி தலைவர் கருப்பணன், குமாரபாளையம் நகராட்சி தலைவர் தனசேகரன், தொழிலதிபர் பழனிசாமி, வாசுதேவன், சண்முகம், நிர்மலா சவுண்டப்பன் உட்பட பவானி, குமாரபாளையம், காளிங்காரயன்பாளையம் பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பவானி ஐயப்ப குருசாமிகளான வையாபுரி, கிருஷ்ணசாமி, நாச்சிமுத்து மற்றும் அக்னி ராஜா, மணிகண்டன், மாணிக்கராஜன், சௌண்டப்பன், ராஜன் உட்பட பவானி ஸ்ரீஐயப்ப பக்த மகாசபா உறுப்பினர்கள் செய்திருந்தனர்.