பதிவு செய்த நாள்
26
மார்
2025
03:03
கூடலுார்; ‘பந்தலுார் எருமாடு சிவன் கோவிலை இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கோவிலை எடுத்தால், போராட்டங்களுடன், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலுாரில், வி.எச்.பி., மாவட்ட செயலாளர் ரமேஷ், இணைச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் நேற்று, கூறியதாவது: பந்தலுார் எருமாடு அருகே உள்ள, எருமாடு சிவன் கோவில், 1,600 ஆண்டுகள் பழமையானது. தற்போது கோவிலுக்கு, 48 சென்ட் நிலம் மட்டுமே உள்ளது. இதனை ஒட்டிய வருவாய் துறை நிலத்தில், உரிய அனுமதி பெற்று ஆண்டுதோறும் சிவராத்திரி பூஜை நடத்தி வருகிறோம். இந்நிலையில், இந்து விரோதிகள், மாற்று மத சக்திகள் அந்த இடத்தில் சமத்துவ பொங்கல் வைக்கவும், கோவிலை இந்து அறநிலையத்துறை எடுக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆளும் தி.மு.க., அரசு திட்டமிட்டு கோவிலை இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளது. கரூரில் நடந்த வி.எச்.பி., மாநில செயற்குழு கூட்டத்தில், இப்பிரச்சினை தொடர்பாக விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. கோவிலை இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சி அரசு கைவிட வேண்டும். அத்துமீறி கோவிலை இந்து அறநிலை துறை கைப்பற்றினால் சட்டரீதியாகவும், இந்து மக்கள் அமைப்புகளை ஒன்றிணைந்து போராட்டங்கள் நடத்தப்படும், என, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டியின் போது, வி.எச்.பி., பொருளாளர் கிருஷ்ணதாஸ், பா.ஜ., கூடலுார் நகர தலைவர் பாலன், மாவட்ட செயலாளர் சிபி, நகர பொது செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.