பதிவு செய்த நாள்
27
மார்
2025
10:03
புதுக்கோட்டை; புதுக்கோட்டையில், 19ம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த நான்கு வகையான ஆண்டு கணக்கு மற்றும் தமிழ் எண்ணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள நைனாராஜு தண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு பணியின் போது, கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு குறித்து, தகவல் அறிந்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினர் ஆய்வு செய்தனர். அக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய நான்கு வகையான ஆண்டு கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது: கடந்த நுாற்றாண்டு வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் தமிழ் எண்களே பிரதானமாக பயன்பாட்டில் இருந்துள்ளதை, தமிழ் எண் மைல் கற்கள் கண்டுபிடிப்பின் மூலம் உறுதி செய்துள்ளோம். இக்கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தில், தண்டாயுதபாணி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டு 1858ம் ஆண்டு வரை, தமிழ் எண்களேபொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளதைஉறுதி செய்கிறது. இக்கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு, கலியுக ஆண்டு, தமிழ் ஆண்டு, ஆங்கில ஆண்டு ஆகிய நான்கு வகையான ஆண்டு கணக்குகள் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். கல்வெட்டில் மன்னரின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்தில் ராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடாம்பட்டியில் செப்பேடு; இதே மாவட்டம், பிடாம்பட்டியில் உள்ள சஞ்சீவிராயர் கோயிலில், 220 ஆண்டுகள் பழமையான செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவடி திட்ட பணிக் குழு, சஞ்சீவிராயர் கோயிலில் ஆய்வு செய்தது. அதில், அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் ரங்கராஜனிடம் இருந்த செப்பேட்டை கண்டறிந்தது. இதுகுறித்து, சுவடித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரை பாண்டியன் கூறியதாவது: கோயில் பரம்பரை அறங்காவலர் ரங்கராஜனிடம் இருந்து பெற்ற செப்பேடு, 32 செ.மீ., நீளமும், 22 செ.மீ., அகலமும் உள்ளது. இதன் முன்பகுதியில், 48 வரிகளாகவும், பின்பக்கத்தில் 36 வரிகளாகவும் எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டின் மத்தியில், தெலுங்கு மொழியில், ‘ஸ்ரீராம ஜெயம்’ என எழுதப்பட்டுள்ளது. இது, 1804ம் ஆண்டு, ஐப்பசி மாதம் 8ம் தேதி எழுதப்பட்டுள்ளது. அதாவது, 220 ஆண்டுகளுக்கு முன், பழனியப்ப வாத்தியார் மகன் வடமலை வாத்தியாரால் எழுதப்பட்டுள்ளது.
தானம்; ராஜராஜ வளநாட்டில், பண்டி சூழ் நாடு எனும் நிர்வாகப் பிரிவின் கீழ் தெற்குலுார் அமைந்துள்ளது. தெற்குலுாரில் காணியுடைய அரசரான திருமலைராய தொண்டைமானின் பேரனும், திருமலையப்பராய தொண்டைமானின் மகனுமான, ராஜவிஜய ரெகுநாதராய பாதாரத் தொண்டைமான் என்பவர், சஞ்சீவிராயர் சுவாமி கோவிலின் நித்தியப்படி, கட்டளை பூஜை, கோவில் திருப்பணி, அபிஷேகம், நைவேத்தியம், அன்னதானம் உள்ளிட்ட தர்மங்கள் தொடர்ந்து நடக்க, நில தானம் வழங்கி உள்ளார். அந்த நிலம், புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் வட்டத்துக்கு உட்பட்ட பிடாம்பட்டியில் உள்ளது. சர்வ மானியமாக வழங்கப்பட்ட இந்த நிலம், வெங்கட்ராம தாசரியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த நிலத்தின் நான்கு புறமும் உள்ள எல்லைகள் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.