பதிவு செய்த நாள்
27
மார்
2025
11:03
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவில், 17 லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, இம்மாதம் ஐந்தாம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடைபெற்றது. முக்கிய விழாவாக, 11ம் தேதி திருக்கல்யாண வைபவம், 12ம் தேதி தேரோட்டம், 13ம் தேதி பந்த சேவை, பரிவேட்டை, 14ம் தேதி சேஷ வாகனத்தில் தெப்போற்சவம் ஆகிய விழாக்கள் முக்கியமானவை ஆகும். இந்த நாட்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மேல் வந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டுச் சென்றனர். அதிகமான பக்தர்கள் வருகை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் தற்கால திருப்பதி உண்டியல்கள் வைப்பது வழக்கம். அந்த வகையில் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் திருப்பதி உண்டியல்கள் மற்றும் தற்கால உண்டியல்கள் வைக்கப்பட்டன. இதில், திருக்கல்யாண வைபவ மொய் உண்டியலில், 53 ஆயிரத்து, 970 ரூபாய் காணிக்கை இருந்தது. 12ம் தேதி தேர்த்திருவிழா அன்று, ஆறு லட்சத்து, 62 ஆயிரத்து, 678 ரூபாயும், 13ம் தேதி, ஒரு லட்சத்து, 64 ஆயிரத்து, 512 ரூபாயும், 14ம் தேதி, 2 லட்சத்து, 60 ஆயிரத்து, 463 ரூபாயும் மற்றும் ஐந்து இடங்களில் வைக்கப்பட்ட தற்கால உண்டியலில், 6 லட்சத்து, 15 ஆயிரத்து, 771 ரூபாயும், ஆக மொத்தம், 17 லட்சத்து, 57 ஆயிரத்து, 394 ரூபாய் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த உண்டியல்கள் காணிக்கைகள், கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி முன்னிலையில் எண்ணப்பட்டது.