மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஒலிக்காத பிரம்ம தாளம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2025 12:03
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தினமும் நடக்கும் திருவனந்தல் பூஜையின்போது இசைக்கப்படும் பிரம்ம தாளம் ஒருமாதமாக இசைக்கப்படாதது பக்தர்களை வேதனை அடைய செய்துள்ளது.
இக்கோயிலில் தினமும் இரவு பள்ளியறை பூஜை நடக்கும். மறுநாள் அதிகாலை அம்மன் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் பல்லக்கில் புறப்பட்டு செல்வார். இதை திருவனந்தல் பூஜை என்பர். பல்லக்கு செல்லும் போது காலம் காலமாக பிரம்ம தாளம் (ஜால்ரா) இசைக்கப்பட்டது. ஆனால் கடந்த திருவாதிரைக்கு பிறகு எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒருமாதமாக இசைக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்திற்கு ஆலயம் காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘ திருவனந்தல் பூஜையின்போது சுந்தரேஸ்வரர் அதிகாலை பல்லக்கு உடன் பிரம்ம தாளம் வாசிப்பது என்பது 5 முதல் 7 நிமிடங்கள் தான். சுவாமி அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் இருந்து புறப்பட்டு சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை சுற்றி முதல் பிரகாரம் உள்ள சன்னதி அடையும் வரை இசைக்கப்படும். நிறுத்தப்பட்ட இசையை மீண்டும் தொடர கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.