பதிவு செய்த நாள்
29
மார்
2025
11:03
சென்னை: கோவை மருதமலை முருகன் கோவிலில், ஏப்.4ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. அதில், தமிழில் மந்திரங்கள் ஓத கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுரேஷ்பாபு, விஜயராகவன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, மருத மலை கோவில் செயல் அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில்,குடமுழுக்கு விழாவில், தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில், மந்திரங்கள் ஓதி, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட உள்ளன. சிவாச்சாரியார், ஓதுவார் ஆகியோர், தமிழ் மந்திரங்கள் ஓதுவர். பன்னிரு திருமுறைகள், திருபுகழ், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை உள்ளிட்டவை பாடப்படும். யாகசாலையில் சமஸ்கிருதத்துக்கு இணையாக, தமிழுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். யாக பூஜையின்போது, 36 யாக குண்டத்தில் தமிழிலும், 36ல் சமஸ்கிருதத்திலும் வேள்விகள் நடத்தப்படும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.