பதிவு செய்த நாள்
31
மார்
2025
10:03
விழுப்புரம்; பிரம்மதேசம் அருகே முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவிலில் பல்லவர் கால அரிய சிற்பங்கள் மற்றும் திருமலை நாயக்கர் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அடுத்த முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவிலில் விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது, 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் அங்கிருந்தது தெரியவந்தன. மேலும், திருமலை நாயக்கர் பெயர் இடம்பெற்ற கல்வெட்டு ஒன்றும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது: முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில், சோழர் காலத்தை சேர்ந்தது. ஏராளமான கல்வெட்டுகள் இங்குள்ளன. பல்லவர் காலத்திலேயே, முன்னுார் சிறப்புற்று இருந்ததற்கு அடையாளமாக, அக்காலத்தை சேர்ந்த தவ்வை மற்றும் லகுலீசர் சிற்பங்கள் இருக்கின்றன. முதல் சிற்பத்தில் மகன் மாந்தன், மகள் மாந்தி மற்றும் குழுவினருடன் ஜேஷ்டா, மூத்ததேவி அமர்ந்த நிலையில் உள்ளார். இரண்டாவது சிற்பத்தில் பிரம்மா, சிவன், பார்வதி, முருகன், நரசிம்மர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த சிறிய அளவிலான சிற்பங்கள், கி.பி., 6 அல்லது 7ம் நுாற்றாண்டுகளை சேர்ந்தவையாகும். ஆய்வின் போது, கோவிலின் தெற்கு சுவரில் திருமலை நாயக்கர் பெயர் பொறித்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. கி.பி., 17ம் நுாற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில், செஞ்சி பகுதியில் அவருக்கு அடங்கியவராக, கஞ்சம நாயக்கர் என்பவர் இருந்திருக்கிறார். அப்போது, முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவிலுக்காக திருநாமத்து காணியாக நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பட்டயம் ஒன்று வெளியிடப்பட்ட தகவலும், இக்கல்வெட்டால் தெரியவருகிறது. முன்னுார் சிவாலயத்தில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.