பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
12:04
பல்லடம்; காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா நடந்தது. நேற்று காலை, 7.00 மணிக்கு கலச ஆவாஹன பூஜை, சகல ஹோமங்கள் மற்றும் மஹா பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. தொடர்ந்து, காலை, 9.00 மணிக்கு அரசு, வேம்பு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், சிவாச்சல சுந்தர குருக்கள் பேசியதாவது: அன்னை, கருணையுடன் மனமிரங்கி வந்தால்தான் அந்த சிவபெருமானே அருள்புரிவார். எந்த குடும்பத்தில் ஒரு பெண் மனநிறைவாக, சந்தோஷத்துடன் இருக்கிறாளோ, அங்கு அனைத்து செல்வங்களும் தானாகவே வந்துவிடும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை. இந்த உலகில் ஆண் – பெண் பேதம் கிடையாது என்பதை தெரியப்படுத்தவே, அம்மையப்பரான சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கருத்து வேறுபாடுகளை மறந்து கணவன்- மனைவி எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்தவே, உலக தம்பதியராக, இறைவன், திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார். இல்லற வாழ்க்கைக்குள் வந்த பின்னரே செல்ல வேண்டும் என்கிறது ஹிந்து தர்மம். மனிதன் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் கடவுள் நமக்கு உணர்த்துகிறார். இவ்வாறு அவர் பேசினார்.