பதிவு செய்த நாள்
02
ஏப்
2025
11:04
பெங்களூரு : ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினருக்கு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி தேவகோட்டை திருச்செந்துார் பாதயாத்திரை குழு அறக்கட்டளை சார்பில், ராமேஸ்வரத்தில் இருந்து மார்ச் 3ம் தேதி 24 பேர் கொண்ட பாதயாத்திரை குழுவினர், காசிக்கு புறப்பட்டனர். 118 நாட்களில், 2,500 கி.மீ., பாதயாத்திரையாக சென்று காசியை அடைய உள்ளனர். நேற்று காலை சிவாஜிநகரில் உள்ள காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். கோவிலின் பிரதான அர்ச்சகர் ராஜா பாலச்சந்திரசிவம், பிரகாஷ் ஆகியோர் வரவேற்றனர். ராமேஸ்வரத்தில் பூஜை செய்து எடுத்து வரப்பட்ட வேலுக்கு, பெங்களூரு தனியார் மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள், திருப்புகழ் பாடினர். பாதயாத்திரை குழு தலைவர் சோமசந்தரம், புனித யாத்திரையின் நோக்கம், திட்டம் பற்றி விளக்கினார். தினமலர் நாளிதழில் வெளியிட்ட செய்திக்கு நன்றி தெரிவித்தார். நேற்று மாலை இங்கிருந்து புறப்பட்டு எலஹங்காவுக்கு சென்றனர்.
அவர் அளித்த பேட்டி: முதன் முறையாக 1983ல் துவங்கிய காசி பயணம், தற்போது வரை தொடர்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை செல்லும் பயணத்தில், ஏழாவது முறையாக என் தலைமையில் செல்கிறோம். இப்பயணத்தில் ஒருவர், ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். இப்பயணத்திற்கு குடும்பத்தினரின் சம்மதம் முக்கியமாகும். ஒரு நாளைக்கு 35 கி.மீ., வரை நடக்கிறோம். அனைவரும் 50 வயதினருக்கு மேற்பட்டவர்களே. ராமர் பயணம் செய்த பாதையில் நாங்கள் பயணம் செய்கிறோம். காசிக்கு சென்றவுடன், அனைவருக்கும் காசி ஸ்ரீ என்ற பட்டத்தை ஐ.ஏ.எஸ்., அதிகாரி வழங்குவார். இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும். இளைஞர்கள் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குழுவினர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பெங்களூரு வருகைக்கு சமூக ஆர்வலர் சுவாமிநாதன் வேண்டிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.
குழு தலைவர் சோமசுந்தரம் தொடர்புக்கு 93658 42107.