பதிவு செய்த நாள்
02
ஏப்
2025
12:04
கோவை; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கும். திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, வெள்ளையானை சேவை, விநாயகர், முருகப்பெருமான், அம்பாள் ஆகியோர் வீதி உலா வருவதும் பங்குனி மாதம் 15 நாட்கள் தொடர்ந்து தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலைநிகழ்ச்சிகள், இசைநிகழ்ச்சிகள் நாட்டிய நாடகம், ஆன்மிக சொற்பொழிவு ஆகியவை சிறப்பாக நடைபெற உள்ளது. விழா நாட்களில் சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். பிறநாட்களில் கோவில் சார்பில் வழக்கமான அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்படும். விநாயகர், சண்டிகேஸ்வரர், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி ரதங்கள் உள்ளன. விழா நிறைவாக வேடுபரி உற்சவம், தெப்போற்சவம், வாணவேடிக்கை ஆகியவை விமரிசையாக நடைபெறும். இதனை முன்னிட்டு பேரூர் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.